சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 238
17/10/2023 செவ்வாய்

“மீண்டும் எழு!”
——————
மெய் தொட்டால் சுருங்குமிலை,
மீண்டும் விரிய மறப்பதில்லை!
கை பட்டால் சுருளும் அட்டை,
கலங்கி உயிர் மாய்ப்பதில்லை!

கல்லடி விழுமே என்றஞ்சி,
காய்க்காது மரம் விட்டதில்லை!
வில்லடி படுமே என்றஞ்சி,
விஜயன் வில்லை விட்டதில்லை!

எட்டாது கொப்பெனச் சிலந்தி,
எடுத்த காரியம் நிறுத்தவில்லை!
எட்டு(ம்) வரை மீண்டெழுந்து,
எட்டியதை, பார் மறக்கவில்லை!

நெப் போலியன் பொனபாற்றும்,
நினைத்த வுடனே வெல்லவில்லை!
தப்போ தவறோ ஏதுமின்றி,
தரணியில் யாரும் நிலைத்ததில்லை!

வெற்றி தோல்வி வாழ்க்கையதன்,
வியத்தகு படிகள் என்றெண்ணி,
வீழ்ந்தால், மறுபடி மீண்டெழுந்து,
வாழ்வோம் தரணியில் என்றென்றும்!

நன்றி
மதிமகன்