சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 231
29/08/2023 செவ்வாய்
“வாக்கு”
————
விரைவில் தேர்தல் வந்திடும்
வீணர் வேட்டை தொடங்கிடும்
உறையில் பரிசும் கிடைத்திடும்
உங்கள் வாக்கும் விலைப்படும்!

கண்டதும் காதல் பிறந்திடும்
கணக்கிலா வாக்கு கிடைத்திடும்
கொண்டவர் பேச்சு மறந்திடும்
கோணிடும் நிலையும் வந்திடும்!

அருள் வாக்கும் விலைப்படும்
ஆசாமி பையும் நிறைந்திடும்
இருள் ஒருநாள் கலைந்திடும்!
இவர் யாரெனத் தெரிந்திடும்!

நல்வாக்கு நலமதும் தந்திடும்
நாடுவோர் குறையும் தீர்த்திடும்
செல்வாக்கு சிலபல அளித்திடும்
செயற்படும் விதத்தில் உதவிடும்!

வாக்கு கண்ணிலும் இருந்திடும்
வடிவாய் பார்த்தால் தெரிந்திடும்
நோக்கும் போது வெளிப்படும்
நோட்டம் விட்டிடப் புரிந்திடும்!
நன்றி
மதிமகன்