சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 193
27/09/2022 செவ்வாய்
மழை நீர்
————-
தாழுண்ட நீரைத் தலையாலே
தான் தரும் தெங்கு போலே
தானுண்ட நீரை வட்டியுடன்
தந்திட வானும் நினைத்ததுவே!

கொட்டியது மழையும் நாடி
குளிர்ந்ததே அதனால் பூமி
பட்டிதொட்டி நிறைந்த நீரும்
பாய்ந்தோடி வீணாய் போச்சே!

கொட்டிடும் நீரைக் காத்திட
கொள்கலன் அமைக்க வேண்டி
கட்டினர் குளங்களை மன்னர்
கண்ணென மக்களைக் காத்தனர்!

மழை பொய்த்துப் போய்விட
மானாவரிச் செய்கைக் கால
விளை பயிரைக் காப்பதற்கு
விழைந்தனர் மன்னர் அன்று!

கடலுக்கு ஓடுகின்ற நீருக்கு
கடிவாளம் போட்டதால் அன்று
திடலிலே பயிர் செய்தோரும்
தீர்வு கண்டு மகிழ்ந்தனரே!

சிறு சிறு குளங்கள் இன்று
சீரழிந்து போக, வெள்ளம்
பெறுமதி இன்றியே பரவி
போய்விடும் கடலை மருவி!

தூர்ந்து போன குளமும்
தூர் வாராத கால்வாயும்
சேர்ந் திருந்தால் போதும்
சேமிப் பில்லாது போகும்!

கார் பொய்த்து விட்ட தென
கண் கலங்கி வாழாது நீரும்
ஊர்க் குளம் பல வற்றையும்
உடன் சென்று தூர் வாரும்!

அரசு செய்து தருமென்றே
அசமந்தம் காட்டாதீர் நீரே!
சிரசினில் கொள்வீர் இன்றே!
சீக்கிரம் மகிழ்வீர் வென்றே!
நன்றி
மதிமகன்