சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 182
27/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“பறவைகள் பல விதம்…”
————————————
பாலையும் நீரையும் பிரித்து
பருகிடும் ஆற்றல் கொண்டு
காலமெல்லாம் வாழ்பவளே
கனிவாம் அன்னத் திருமகளே!
கொஞ்சும் இதழெடுத்து
கொவ்வை நிறம் கலந்து
அஞ்சுகமெனப் பெயரெடுத்து
அகிலத்தை ஆள்பவளே!
மஞ்ஞை எனும் பெயரெடுத்து
மானிடத்தின் மனங்கவர்ந்து
நெஞ்சத்தில் நிறைபவளே
நிகரில்லா அரும் மகளே!
தூரத்தில் வரும்போதே
துளைக்கும் குரலெடுத்து
ஆரவாரம் செய்பவளே
ஆர்ப்பரிக்கும் குயில் மகளே!
கூரான மூக்கெடுத்து
குனிந்து முகம் புதைத்து
காரிருள் கலையுமுன்னே
கனிரசம் குடிப்பவளே!
கொண்டைத் தலையசைத்து
கோதி நல்ல வீடமைத்து
அண்டி வந்தோர்க் குதவிடும்
அரும் நிறத்துக் கலைமகளே!
முகத்தில் வெள்ளையடித்து
முழு உலகும் வட்டமடித்து
கணத்தில் கொள்ளையடிக்கும்
கருடனே, கவின் மகளே!
நன்றி
மதிமகன்