சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 181
12/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
கல்லுப் படுக்கையிலிருந்து ஓர் கதறல்!
————————————————
கல்லுப் படுக்கையில் நான் படுத்தபடி
கதை சொல்கிறேன் கண்ணே கேளுங்கடி
மல்லாக்காய் கிடந்து மனம் நொந்தபடி
மனதால் சொல்கிறேன் சற்றுக் கேளுங்கடி!

காட்டினில் வளர்ந்தேன் கண்டபடி
கணக்கான கனதிச் சிறு துண்டாக்கி
பாட்டில் போட்டனர் பரிவு ஏதுமின்றி
படுபாவிகள் தம் மனம் எண்ணியபடி!

தூரத்தில் வந்திடும் ஓசை கேட்டபடி
துள்ளி ஓட வென்னால் முடியாதபடி
பாரத்தை நெஞ்சில் போட்டமர்த்தி
படுபாதகம் செய்து படுக்க விட்டபடி!

யாழின் பேரைத் தன்னில் சுமந்தபடி
யௌவனமாய் வருவாள் ஒரு கிழத்தி
ஊழில் செய்த ஏதோ வினையின்படி
உத்தரதேவி வருவாள், தருவாள் பாக்கி!

உதயதேவி என்ற பெண்ணொருத்தி
உரசிச் செல்வாள் நெஞ்சை அழுத்தி
உடரட்ட மெனிக்கே எனும் இன்னொருத்தி
உயரச் செல்வாள் என்மேல் உந்தியபடி!

ரஜரட்ட ரஜனி என்னும் இன்னொருத்தி
ராஜதானி நோக்கி செல்வாள் இஷ்டப்படி
பயமின்றி என் நெஞ்சை மிதித்தபடி
பாய்ந்து செல்வாள் தினம் இரக்கமின்றி!

ஆமை வேகத்தில் நகர்வாள் ஒருத்தி
அசுர வேகத்தில் பறப்பாள் இன்னொருத்தி
ஊமைபோல் கண்ணீர் தினம் சிந்தி
உழன்று சாகிறேன் உணர்வார் எவருமின்றி!
நன்றி
மதிமகன்