சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 176
24/05/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
புதிய காட்சிகள்
———————
நாட்டிலே நாம் கணக்கெடுக்கா
நல்ல பல செடிகள் இந்நாட்டில்
வீட்டின் நடுவில் விருந்தினராய்
விதவித அழகுச் சாடிகளில்!
கண்ணுக்கு அக்கா மை செய்த
கத்தாளைச் செடி ஒரு வீட்டில்
முன்னுக்கு நின்று வரவேற்குது
முழுவதும் தானெனச் சொல்லுது!
நள்ளிரவில் போன் எடுத்து நாளும்
நல்லபல செய்தி சொல்லும் நண்பர்
அள்ளித் தந்த செய்தியால் அன்று
அசந்து போனேன் சில கணங்கள்!
பிள்ளைகள் உம்மைக் கைவிடினும்
பிள்ளைக் கத்தாளை போதுமென்றார்!
உள்ளுள்ள சாற்றைக் குடித்தீ ரென்றால்
உண்மை உமக்கு தெரியு மென்றார்!
சீண்டியும் பாராத சிறுகுறிஞ்சா இலை
சிலிர்த்துக் கிடக்குது தமிழ் கடையில்
நோண்டிப் பார்த்தேன் நான் அவரிடம் நெகிழ்ந்து சொன்னார் நல்ல செய்தி!
இரும்புச் சத்தை ஈடுசெய்ய இவ்விலைக்கு
ஈடில்லை என்றும்-பாகமும் சொன்னார்
சிறிதாய் அரிந்து சின்ன வெண்காயத்துடன்
சிறிது சமைத்துப்பார் தெரியுமென்றார்!
வாழைத் தண்டுக் கறியும் நல்லதாமே!
வாங்கிக் கட்டினேன் நான் அவரிடம்.
காலைக் கடனை இலகு படுத்துமாம்
கற்றறிந்து கொண்ட செய்தி என்றார்!
அருகம் புல்லின் அரும் சாறெடுத்து
அதற்குத் தேனும் கொஞ்சம் கலந்து
பருகிப் பார்த்து நீர் சொல்லும்-நாளை
பார்க்கிறேன் என்றார், “பாய்” சொன்னார்!
நன்றி
மதிமகன்