சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 175
17/05/2022 செவ்வாய்

“தீயில் எரியும் எம் தீவு”
—————————-
“பையவே சென்று பாண்டியற்காகவே!”என்று
பாலகன் சம்பந்தர் பாடினார் அன்று!
மெய்யாக மீண்டும் மெய்த்ததோ இன்று!
கையோடு கம்மாரிசான கதையாய் வந்து!

அரசன் அன்று கொல்வான் என்றும்
ஆண்டவன் நின்று கொல்வான் என்றும்
உரசிப் பார்த்தால் உண்மை தெரியுமென்றும்
உலகம் நம்புவது நடப்பது போன்றும்!

பிஞ்சும், பூவும், பொட்டுடன் தாயும் அன்று
பிணங்களாகி வருடங்கள் போய் என்றும்
வஞ்சினம் கொண்ட வைர நெஞ்சுடன் ஒன்றி
வணங்கத் தடுக்கும் வஞ்சகராய் இன்றும்!

ஏதேதோ சொல்லி எரிகிறது தீ இன்று
எமக்குத் தெரியும் என்ன சொல்லுமென்று
காதைக் கொடுத்து கேளுங்கள் நன்று
கற்பனை என்று நினைக்காதீர் நின்று!

பகலில் செய்தது இரவில் விளையுமென்ற
பழமொழி ஒன்று பாரினில் உண்டு
பாகல் போட்டால் புடோல் முளைக்காதென்ற
பழமொழி உனக்குத் தெரியாதா சொல்லு!

நன்றி
மதிமகன்