சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 171
19/04/2022 செவ்வாய்
“எதிர்ப்பலை”
அனலாய்க் கொதிக்கும் வெய்யிலிலும்
அடையாய் பெய்யும் மழையினிலும்
மனது நிறைந்த கவலையுடன்
மக்கள் அலையாய் குவிந்தனரே!
ஆவேசம் கொண்ட அலைகடலாய்
ஆகாயம் கேட்கக் குரலெழுப்பி
பொய்வேசம் போட்ட போக்கினர்க்கு
பேய்வேசம் பூண்ட போராட்டம்!
விலைவாசி மக்களை வாட்டிடவே
வீதிக்கு அலையென திரண்டனரே
அரசியல் கலப்பின்றி மக்கள் அலை
ஆயிரமாய் அணி திரண்டதுவே!
நாட்டைச் செல்லாக் காசாக்கி
நகைப்புக் கிடமாய் ஆக்கிவிட்ட
கேட்டை நினைத்துப் படையெடுத்து
கெம்பி எழுந்தனர் தன்னார் வமாய்!
கருவூலம் மொத்தமாய் காலியாச்சு
கணக்கெல்லாம் தீர்ந்து போயாச்சு
தெருவெலாம் மக்கள் சேர்ந்தாச்சு
தேடிய நற்புகழ் தொலைத்தாச்சு!
இன்றெல்லாம் புரிந்ததது மக்களுக்கு
இதயங்கள் வெடிக்கச் சுக்கு நூறாய்
நின்றவர் போனவர் வந்தவ ரெல்லாம்
நினைத்து நினைத்து வெம்பு கின்றார்!
நன்றி
மதிமகன்