சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 229
செவ்வாய் 18/07/2023
“இயற்கை”
—————
இயற்கை என்னும் இனியவள்
இங்கும் அங்கும் உறைபவள்!
செயற்கை யென்பதன் எதிரவள்
சேவிக்கும் தெய்வம் ஆனவள்!
“வைகறை” யெனும் பெண்ணவள்
வர்ணம் கொண்ட அன்னவள்!
கைவளை குலுங்க காண்பவள்
“காலை”யின் தங்கை ஆனவள்!
“வசந்தம்” என்னும் மென்னவள்
வாலிப வயதின் கண்ணவள்!
நிசந்தான் வாழ்வென நினைத்தவள்
நீலி “கோடை”யால் அழிந்தவள்!
“தென்றல்” என்னும் தேவியவள்
தேனமு துண்னும் பாவியவள்!
முன்றல் மல்லியை முகர்ந்தவள்
மூத்தவள் “வாடை’யின் இளையவள்!
ஆழியின் மேனியில் உறைபவள்
“அலை”யெனும் நாமம் உடையவள்!
காளியாய் மாறும் குணத்தவள்
கண்களைப் பனிக்க வைப்பவள்!
நன்றி
மதிமகன்