சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 203
06/12/2022 செவ்வாய்
“மார்கழி”
*******
பொங்கல் தரும் எங்கள்
புதிய “தை” மகளுக்கு
திங்கள் ஒன்று மூத்தவளே
திரு வுருவே மார்கழியே!

கார்முகில் நிறத்தவளே
காரிகையே மார்கழியே!
தார்மீகக் குணத்தவளே
தாரகையே, தாரணியே!

சிந்தும் மழைத் துளியில்
சிலிசிலிர்த்து நின்றவளே!
எங்கும் ஒரே பச்சையென
எழில் உருவாய் ஆனவளே!

ஆதிரைப் பெரு விழாவும்
ஆண்டவர் ஜேசு பிறப்பும்
சீதனமாய் எமக் கீந்தாய்
சீர் பெண்ணே நீ வாழ்க!

ஊர் எங்கும் முற்றத்தில்
உல கறியக் கோலங்கள்
கார் விலகி விடு முன்னர்
காணும் பெரும் விருந்து!

ஏர் ஓட்டும் வயலெங்கும்
நீர் நிறைந்து நிற்கையிலே
கார் கொணர்ந்த மீனினமும்
கபடி விளை யாடு மங்கே!

அட்டையும், கொடும் பாம்பும்
அடங்காக் குரல் தவளையும்
கொட்டும் பெரும் தேள்களும்
கோலோச்ச ஏன் விட்டாய்?
நன்றி
மதிமகன்