சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 224
30/05/2023 செவ்வாய்
“ மூண்ட தீ”
—————
அன்று எப்போ மூண்ட தீ
அகில்ம் தெரிய நீண்ட தீ
இன்று வரை எரியும் தீ
ஈனம் தரும் அடிமைத் தீ!
அண்ணன் செயலால் மூண்டதீ
ஆளும் வர்க்க பேதத் தீ
எண்ணும் எங்கும் மூளும் தீ
எழுமே நாளும் பொறாமைத் தீ!
அறுபது தனிலே மூண்ட தீ
ஆயுதம் தூக்க வைத்த தீ
கறுப்பது ஒன்றே கொண்ட தீ
காரியம் எல்லாம் தடுத்த தீ!
சிவனின் கண்ணில் மூண்ட தீ
சினத்தின் வெளிப்பா டிந்தத் தீ
அவனின் எதிரியை அழித்த தீ
ஆயிரம் காலமாய் எரியும் தீ!
கண்ணகி சினத்தில் மூண்ட தீ
காவிரிப் பட்டினம் அழித்த தீ
எண்ணவே பதறும் இந்தத் தீ
ஏழேழு காலமும் மாளாத் தீ!
பாண்டியன் செயலில் மூண்ட தீ
பையவே சென்று மீண்ட தீ
தீண்டிய பொழுதில் தீதுறும் தீ
தீமையும் நன்மையும் தருமே தீ!
நன்றி
மதிமகன்