சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 222
செவ்வாய் 16/05/2023

“பெற்றோரே…”
——————-
அண்ணனின் ஏக மகளவர்!
அழகினில் மேகலை உறவினர்!
திண்ணிய நெஞ்சு படைத்தவர்!
தீதில்லா குணங்கள் நிறைந்தவர்!

தங்கையின் மூத்த மகனவர்!
தாரண்யம் நின்ற குணத்தவர்!
பங்கம் ஏதுமில்லா பகலவர்!
பார்ப்பவர் நெஞ்சில் உறைபவர்!

முதலில் சொன்னது என் அன்னை!
முழுமதி போன்றது அவர் தன்மை!
இரண்டில் சொன்னது என் தந்தை!
இதயம் காட்டிடும் அவர் மென்மை!

இருவரும் அன்பதன் உறைவிடம்!
இதயத்தில் ஏதுமிலை மறைவிடம்!
உருவினில் சிற்சில வேற்றிடம்!
உணர்வினில் இருவரும் ஓரிடம்!

சாதகப் பொருத்தக் குறைவுகள்!
சரியில்லை என்றனர் உறவுகள்!
காதலுக் கிருவரும் அடிமைகள்!
கட்டினர் திருமணம் இளமையில்!

மகவுகள் இருவர் பிறந்தனர்!
மகிழ்வுடன் சிலநாள் இருந்தனர்!
கனவுகள் மனதில் வளர்த்தனர்!
காலம் பொய்யென உணர்ந்திலர்!

அன்னைக்கு நோயின் இழிநிலை!
அதனால் குழம்பிற்று சமநிலை!
முன்னவனை வேண்டியும் தரவில்லை !முருகனை அழைத்தும் பயனில்லை!

அன்னையவர் துறந்தார் புவிதனை!
அன்றுமுதல் இழந்தோம் பலமதை!
சொன்னாலே நீளும் எம்கதை
சோகங்கள் தீரா தொருகதை!

தந்தையவர் வளர்த்தார் பந்தமுடன்!
தானே தாயென்ற சிந்தையுடன்!
எந்தையும் தாயும் என்றென்றும்-எம்
சிந்தையில் உறைவர் பாசமுடன்!
நன்றி
மதிமகன்