சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 221
09/05/2923 செவ்வாய்
“காணி”
———-
அம்மா வழிக் காணியது!
அளந்து பகிர்ந்து தந்தது!
சும்மா கிடந்த நிலமது!
சுற்றம் இன்றித் தவித்தது!

வல்லைக் காணி போன்றது!
வரண்டு இருந்த நிலமது!
எல்லைக் கல்லு இருந்தது!
எனினும் வேலி அற்றது!

முள்ளும் கல்லும் நிறைந்தது!
மூங்கில் மரமும் நின்றது!
கள்ளுப் பனையும் நின்றது!
கறையான் புற்றும் இருந்தது!

அல்லல் எதுவும் அற்றது!
அமைதி வாழ்வுக் கேற்றது!
எள்ளல் தொள்ளல் அற்றது!
எளிமை நிரம்பப் பெற்றது!

உள்ளம் மிகவும் நெகிழ்ந்தது!
உடனே வேலை தொடர்ந்தது!
பள்ளம் எல்லாம் உயர்ந்தது!
பற்றை எல்லாம் அகன்றது!

பயிரால் வளவு நிறைந்தது!
பாம்பு புற்றும் அழிந்தது!
உயிரும் உளமும் குளிர்ந்தது!
உண்மை உழைப்பு மிளிர்ந்தது!

உனக்கு என்றொரு காணி வேணும்!
உடல் சாய்ந்திட வீடும் வேணும்!
பிணக்கு இல்லாத வாழ்வு வேணும்!
பீடை இன்றியே வாழ்ந்திட வேணும்!
நன்றி
மதிமகன்