சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 213
07/03/2023 செவ்வாய்
“நாதம்”
———-
கோவில் மணி நாதம்-அது
குடிகளுக்கு என்றும் வேதம்!
பூவில் வண்டின் நாதம்-அது
புரியாத இனிமை கோலம்!

அவன் ஆடிடும் நாதம்-அது
ஆனந்த உச்சத்தின் வேதம்!
இவண் இல்லை பேதம்-என்றும்
இணையிலா நாத கானம்!

கானத்தில் பிறந்த நாதம்-அதில்
காலத்தால் வாராது சேதம்!
மோனத்தில் ஆடும் பாதம்-அது
மோதல் இல்லாத ஞானம்!

நாதஸ்வரம் ஓர் ஞானம்-அதில்
நமக்குள் இல்லை பேதம்!
வேத உச்சாடன நாதம்-அது
விண்வரை சென்று மீளும்!

தந்திகள் தரும் நாதம்-அது
தானாக உயிரை மீட்டும்!
அந்தியில் வீசும் காற்று-அது
ஆன்மாவை வருடும் நாதம்!

இருபக்க அடிதாங்கும் மேளம்-அதன்
இணைவில் இசைந்திடும் நாதம்!
தருவிக்கும் இன்பமுதிர் தாளம்-அது
தந்திடும் இணையிலா நாதம்!

நன்றி
மதிமகன்