சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 264
07/05/2024 செவ்வாய்
“விழிப்பு”
———-
மனிதரில் ஆயிரம் வகையுண்டு!
மனதிற்கு மாறும் குணமுண்டு!
நினைவதில் நீயதை வைத்துவிடு!
நிதமும் விழிப்புடன் இருந்துவிடு!
உள்ளத்தில் கபடம் வைத்திடுவர்!
உன்னையும் நம்பிட வைத்திடுவர்!
பள்ளத்தில் சாய்த்து வீழ்த்திடுவர்!
பாவியாய், தரமாய், நடித்திடுவர்!
உண்மை நண்பராய் துடித்திடுவர்!
உதவிக் கரங்களும் தந்திடுவர்!
வண்மை நெஞ்சம் கொண்டிடுவர்!
வாழ்வை நரகமாய் மாற்றிடுவர்!
இனங்கள் எல்லாம் ஒன்றென்பர்!
இடத்திற் கமையப் பேசிடுவர்!
சனங்கள் எல்லாம் சமமென்பர்!
சட்டெனத் தொனி மாற்றிடுவர்!
அவரவர் நிலம் அவர்க்கென்பர்!
ஆயிரம் கதைகள் சொல்லிடுவர்!
நவயுக புருஷராய் மாறிடுவார்!
நாடகம் எல்லாம் நடத்திடுவார்!
விழிப்பதை நீயும் கொண்டுவிடு!
விடுகதை எல்லாம் புரிந்துவிடு!
களிப்பதைப் பின்னே தள்ளிவிடு!
காலம் பொன்னென உணர்ந்துவிடு!
நன்றி
“மதிமகன்”