சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கெளரி மச்சாள்”
————-
கன்னியாய் கண்ட
கெளரி மச்சாள் தோற்றம்
இன்னும் மின்னுகுது கண்ணுக்குள்.
கன்ன குழி அழகில்
கனிவாய் சிரிப்புதிரும்.
பின்னல் சடை உச்சி வெட்டி,
பின் தொங்கும் .கால் முட்ட,
எட்டும் பாவாடை.எங்கள்
சின்ன மச்சாள்
கையில் நிதமும்
கல்கி ,விகடன் என
சஞ்சிகைகள் பலதும்
நெஞ்சில் அணைந்திருக்கும்.
பொக்கிசமாய் மாமி
போர்த்து வைத்து
வளர்த்த பிள்ளை.

அம்மாவின் கைப்பிடியில்
அம்பனையால் மாத்தனைக்கு
அன்னாளில் போவோம் அடிக்கடி நாம்.
ஒன்றை வரம்பில்
ஓடோடி சறுக்கி,
பாட்டுவாளி தாண்ட
பக்கம் எல்லாம் சொந்தங்கள்.
தொங்கல் முடக்கில்
துலங்கும் மனை சுற்றி
எங்கும் பழ மரங்கள்.
பெரிய மாமி வீட்டுள்
பிரியம் உடன் நுழைய,
சின்ன மச்சாள் கெளரி
செல்லமாய் உபசரிப்பா.
தின்னப் பழங்கள் எல்லாம்
தேடி பிடுங்கிடுவா.
என்ன தலை விதியோ
இடையில் சில வருடம்
சின்ன முறுகள்.
தன்னை விதி வஞ்சித்தும்
தளரவில்லை.அம்பாள்
துர்க்கை
அடியவளாய் தொண்டோடு
நின்றா.
சோதரியை இழந்த பின்னும்
சோகத்தில் தவிக்காமல்
ஆதரவாய் இருந்தார்கள்
அயல் அருகு சொந்தங்கள்.
எட்ட இருந்தாலும்
இருவர் பெறாமக்கள்
ஒட்டி உருகி நின்றார்.
காலன் கணக்கில்
காலம் முடிந்ததனால்
மாயன் திருவடிக்குள்
மறைந்தா.
அப்பர் முகம் தெரியா
அப்பாவி என் மனதில்
அப்பர் வழி உறவாய்
அன்பை சொரிந்த பந்தம்.
மனதில் நினைவலைகள்
கனமாய் கரை வழிய,
நினது ஆத்ம சாந்திக்கு
நெஞ்சார பிரார்திப்பேன்.
போய் வருக மச்சாள்!
வம்சம் தழைக்க
வந்துதிக.
ப.வை.ஜெயபாலன்