சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

நீரிழிவு

நீரிழிவு தலைப்பில்
நிலைதடுமாறினேன்
என் அப்பனை
நீள்துயில் கொள்ள வைத்து
என்னை நீங்கா வேதனையில்
தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான்.

நீரிழிவு இதனால் எத்தனை
பேரிற்கு பேரழிவு
தீரா நோயாக நுழைந்து
ஆறாத வலிகளை தந்து
நீறாக்கியது பலர் வாழ்வை.

சிறுநீர் கழிக்கும்
தடவைகளும் அதிகரிக்கும்
சீறிச் சினக்கும்
குணங்களும் ஆர்பரிக்கும்
சீர்கெட்ட நோயிது.

பஞ்சி குடியேறும்
பசி குடியெழுப்பும்
பக்குவம் படலைதட்டும்
பரிகாச நோயிது

நலிவு கொள்ளும்
தெளிவு குன்றும்
காயங்கள் ஆற
கனகாலம் எடுக்கும்
கனதியான நோயிது.

உனக்குள்ளே கட்டுப்பாடு
இருக்கும் வரையில்
நெருங்காது இந்த நோய்
என்ற எண்ணத்தோடு
பக்குவமாய் நடந்துகொள்
பாரிலே நிமிர்ந்து நில்.