சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

இறைவா!
எண்ணி எண்ணி ஏங்குதற்கா
எங்களை நீ! படைத்தாய்
என்றுமே தீராத
எத்தனை எத்தனை வலிகள்
எங்களை ஆளுகின்றது.

கஸ்ரப்பட்டு உழைச்ச காசில்
காணி ஒன்னு வாங்கி விட்டன்
வாங்கிய காணியில்
வாழும் முன்பே
வலுத்த சண்டையில்
இடமும் பெயர்ந்தேன்.

பேணி பேணி
பார்த்த காணிய
பிரியமறுத்து
விறைச்சு நின்றேன்.

ஆமி வந்து ஆக்கிரமிச்சு
அரசமரத்த நட்டு வைக்க
புத்தர் சிலை எழுந்தது
எந்தன் நிலை குலைஞ்சது.

எத்தனை கனவோடு
வாங்கிய காணியில்
விகாரை பிறந்தது
என் கனவு பறந்தது.

வலிந்து கொண்டவன்
வலிமையோடு இருக்கிறான்
நாளும் எம் காணிகள்
சிங்கள குடியேற்றங்களாகின்றது
எவர் தடுக்க முடியும்
எல்லாம் எம்மினத்தின் சாபம்.