சந்தம் சிந்தும் கவிதை

பல தேவகஜன்

தீப ஒளி

கார்திகை நாளிலே
எத்தனை எத்தனை தீபம்!
ஏற்றி வைத்து அழகுபார்த்தேன்
அத்தனை தீபமும் அணையாது
அப்படியே என் நினைப்போடு
நின்று எரிகிறதே இன்றும்.

கொண்டாடி மகிழ
கொடுத்து நான் வைக்கவில்லை
கொண்டாடி மகிழ்ந்த நினைவுகளை
கொன்றும் நான் விடவில்லை.
என்றாலும் எனக்குள் பெரு ஏக்கம்!
நிண்டாடி அழுதும்
நிலத்து வாழ்க்கை நிலைக்கவில்லை
திண்டாடி வாழும்
புலத்து வாழ்வும் பிடிக்கவில்லை.

நினைக்க நினைக்க
நிறைவாயிருக்கு
கனத்த மனமும் சுகமாயிருக்கு
அந்த ஆனந்த வாழ்வை
மீண்டுப் பார்க்கின்றேன்
மீளவும் கேட்கின்றேன்.

ஊர் முளுதும் வெடியோசை
கோவில்களில் மணியோசை
தீபாவளி வந்துவிட்டாலே
எத்தனையோ பரவசங்கள்!
எங்களுக்குள் நுழைந்துவிடும்.
புதுவரவாய் புத்தாடை
வெடி வெடிக்க பட்டாசு
பலவிதமாய் பலகாரம்
நிறைந்தே கிடக்கும்.

பொடிகளோடு சேர்ந்து
வெடிகளை போட்டு
ஊரையே எழுப்புவோம்
வீண் வம்பிலும் மாட்டுவோம்.
கூட்டமாய் சேர்ந்து
கிண்டலடித்து எங்கள்
வயதினை காட்டுவோம்.

பலர்வீட்டு பலகாரம்
ஒருதட்டில் நிறைச்சுவைச்சு
திண்டு ருசித்தபடி
தவணிபோட்ட தங்கங்களை
வெடிபோட்டு மிரளவைப்போம்.
மிரண்டு போன தாவணிகள்
தகப்பனை கூட்டிவர
தலைதெறிக்க ஓடிடுவோம்.
தறுதலைகள் நாங்கள் என்ற
பட்டமும் பெற்றிடுவோம்.
தன்மானம் முட்டிக்கொள்ள
தகராறும் பண்ணிடுவோம்.

ஊரையே உலுப்பிவிட்டு
ஆடித் திரிந்த அலுப்புடனும்
பண்டிகை முடிந்த களைப்புடனும்
வீடுவந்து சேர்ந்தாலும்
அன்று முழுக்க
பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனங்களில்.

அன்றய நினைப்போடு
புலத்தில் என் புலம்பல்
நிலத்தில் என்றோ ஓர் நாள் ஆறும்
அன்றே என் வாழ்வும்
தீப ஒளியாய் மாறும்.