வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

21/07/22
கவி இல(65)
அது இது எது
தெளிவான தொடக்கமென்று ஏதுமில்லை
முடிவான முடிவென்றுமொன்றுமில்லை
இதயத்திலிறுக்கமாய் இடம்பிடித்து
இன்ப துன்ப வேளையிலுமின்புற்று இருக்குமது

விண்ணில் மின்னும் தாரகைகள்
வான வில்லின் வண்ணங்களாய்
மலரில் கலந்திருக்கும் நறு மணமாய்
பாசமாய் என்றுமே இணைந்திருக்கும்

விட்டுக் கொடுக்கும் என்றும்
விடாமலுமிருக்கும்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உரிமையாய் தேடி வரும்

தவறுகளைத் தட்டிக் கேட்கும் என்றும்
உணர்வுகளோடு உரையாடும்
கருத்து மோதல் ஏற்படினும்
கலந்துறவாடி மகிழ்ந்திருக்கும்

ஆழ்கடலில் மூழ்கித் தேடும் வெண் முத்து
விலை மதிப்பென்று இதற்கேதுமில்லை
உண்மையன்போடு இறுதிவரை பயணிக்கும்
உன்னத உறவு இது
நட்பு உண்மை நட்பு