வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை(59) 05/05/22
எழுச்சி

ஒன்று பட்டால் வாழ்வென்ற
குறிக் கோள் ஒன்றே மனதில் கொண்டு
உறுதியோடு எழுச்சி கொண்டு
திரளுதங்கே மக்கள் வெள்ளம்.

இன மத மொழி பேதமின்றி
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையென
ஊழல் செய்து நாடழித்த
அரசுக்கெதிரான பெரும் போராட்டம்.

உள்ளத்து உணர்வு பொங்கியெழ
கால் வயிற்றுக் கஞ்சிக்கும்
பாலுக்கழும் குழந்தைக்குமாய்
தீர்வொன்று கிடைக்கபோராட்டம்

இலவம் பழம் பழுக்குமென்று
பேதைக் கிளிகள் காத்திருக்க
பழம்தான் பழுத்திடுமோ,..இலவம்
பஞ்சுதான் வெடித்துச் சிதறிடுமோ?

அரங்கேற்றமில்லாமல் அரங்கேறும் காட்சி
மலருமோ அங்கு நல்லாட்சி
போராடும் மக்களுக்கும் மீட்சி
கிடைத்திட்டால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி