வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல (55) 31/03/22
மூத்தோர் மாண்பு போற்றுவோம்.

பாரம்பரியத்தை வாழ்ந்து
அமுதோடு பண்பாடும் ஊட்டி வளர்த்து
விழுதுகளாய் நாம் வளர
காரணமாய் இருந்த வேர்கள்.

பதறாது காரியமாற்றி
சிதறாது சேமித்து வைத்து
சிக்கனமாய் செலவு செய்து
பக்குவமாய் வாழ்ந்து எம்மை

கரை சேர்க்கும் தோணியாய்
உயர் நிலை அடைய ஏணியாய்
மணம் வீசத் தேய்ந்த சந்தணமாய்
தியாக சின்னமாய் ஒளிர்ந்த எம் மூத்தோர்

மதிப்பு மிக்க பெரியோரை
அவமதிக்க மாட்டோம்,
கண்மணி போல் காப்போம்
மனம் நோகப் பேசோம்.

மூத்தோர் வாழும் வீட்டில்
நடமாடும் தெய்வத்தின் பாதச் சுவடிகள்
நாளும் பணிந்து வாழ்வோம்,
நன்றியோடு போற்றி.