சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

*ராணி மகாராணி*

நேரியகோட்டிடை நிமிர்ந்து நீ நின்றாய்
நிச்சியமானது மானுடம் என்றாய்
ஓருகுடை அடியினில் உலகமும் என்றாய்
உயர்ந்தொரு ராச்சியம் பரந்து நீ கண்டாய்
ஆண்டுகள் எழுபது மணிமுடிசூடி
ஆண்ட என் அரசியே ராணியே வாழி.

பார்முழுதாகிய ஆங்கிலம் கண்டோம்
பரவசமானது உன்மொழி என்றோம்
நேர்மறையான பண்புகளெல்லாம்
நிமிர்ந் தெழுந்துலகில் நிறைந்தது கண்டோம்
ஆண்டது நீயது அரசியென்பதனால்
ஆகாசவாணியே ராணியே வாழி.

பூவிலும் மெல்லிய புன்னகையாளே
போரினில் உலகினை வென்றவள் நீயே
வானத்து சூரியன் விடுப்பெடுக்காமல்
வந்துநுன் சேவகம் செய்தவன் என்பர்
ஐம்பத்தியாறு தேசங்கள் ஒன்றாய்
ஆண்டமா ராணியே அங்கயற்கண்ணி.

வீழ்ந்திடவில்லை யுன்ராச்சியம் இன்றும்
வென்றிட யாருமே பிறந்ததுமில்லை
நின்று நல்லுலகம் நாளையும் பேசும்
நிமிர்ந்தவுன் புகழது உலகிடை நீளும்
மாண்பொடு மரகதமானவள் நீயே
மங்காத வைரமே மாராணி வாழ்க.