சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

-எண்ணம் தடுமாறி-
அந்தோ போறானே
மதிபிசகி ஓருமனிதன்
கொஞ்சம் பொறுத்திடுவீர்
கேளும் அவன் கதையை
பந்த பாசமெல்லாம்
பற்றறுக்கப்பட்ட அவன்
பார்ப்போர் கண்ணுக்கு
பரிகாச மாகின்றான்

பூர்வீகம் கேட்டலோ
புண்படுவீர் நெஞ்செல்லாம்
நேராய் அவன் நிலையை
நின்றொருகால் கணித்திருந்தால்
வேராய் இதயத்தின்
வெளிநரம்பு வெடித்துவிடும்

காலச்சுழற்சியினால்
கட்டறுக்கப்பட்ட இவன்
சீறும் பெருமூச்சு
சிறிய புயற்காற்று.

சென்ற ஆண்டு முற்பகுதி
சிறுதூறல் தொடர்ந்து மழை
காற்றும் அவ்வப்போ
கரைகடந்து புயலாகி
சீற்றமாய் பெய்த மழை
திண்ணைவரை ஏறியது.

ஆற்றை நிறைத்தோடி
அரையளவுக் கெழும்பியது
முற்றியது ஏழுநாள்
முழுவெள்ளம் நிரம்பியது
புற்றின் பாம்பெல்லாம்
பொதுவெளியில் ஓடியது.

வெட்டி வைத்திருந்த
வேளாண்மை நெல்லுடனே
பட்டி நிறந்திருந்த
பால்மாடடும் வெள்ளாடும்
சட்டி பானையுடன்
பெட்டி குட்டானும்- நீரில்
தட்டி போனதற்கு
வீரமுள்ள இம்மனிதன்
சற்றும் இழகவில்லை
தன்னிலையை இழக்கவில்லை.

பத்துநாள் இரவு பகல்
பாடாய் மழை பொழிந்து – வெள்ளம்
காடாய் பெருகியது
கடலாய் உறுமியது
வீடும் சுவர் இடிந்து
வீரியமாய் மூடியது
உள்ளே அவன் மனைவி
உத்தமியும் குழந்தையையும்
கண்முன்னே கவுகொண்ட
கோலத்தை கண்ட இவன்
கண்ணிர் விடவில்லை
கடவுளையும் வேண்டவில்லை.

அந்தோ போறானே
மதிபிசகி ஓர் மனிதன்
கண்டீரோ அவன் கதையை
கேட்டீரோ சாற்றுங்கால்.