சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

-ஆறறிவு-

மரத்துக்கு ஓரறிவு..
மண்விழுந்த புழுவுக்கு
ஈரறிவு..
எறும்புக்கு மூவறிவு..
பாம்புக்கு நாலறிவு..
காக்கை நாய் கொண்டது
ஐந்தறிவு..
மானுடத்திற் காறறிவு..

மண்ணுக்கு அறிவில்லை..
மலை உடைந்த
கல்லுக்கும் அறிவில்லை
சிற்பி திரட்டி நிறுத்தினான் சிலை
விக்கிரகம் என்றனர்
காலை மாலை அபிஷேகம்
அரசனையும் அண்டத்தையும்
காக்குமாம் அது….

முகம் அறிந்தால் உலகில்
அவர் அறிவாளி…..
அங்கீகாரம் கிடைத்துவிட்டால்
அவர் பெரும் புலவர்
சிரிப்பவர் நல்லவர்
போலியையும் புளுகையும்
நம்பி நடக்கிறது உலகம்…

கால் தடக்கி கல்லில் அடித்ததால்
காயம் பட்டது கால்
மழை பெய்யவில்லை மூன்று மாதம்
குடிநீர் கொண்டுவர
ஊர் விட்டு ஊர்போனான் மனிதன்
அவன் நட்ட தென்னை
எங்கேயும் போகாமல் இளநீர் தந்தது..

மனித சுயநலத்தால்
நஞ்சானது பூமி
நிலத்தில் சிந்திய பாலை
நக்கி குடித்ததால்
ஐந்தறிவு
நாய் செத்துப்போனது

பாளாய்ப்போன மனிதன்
பார்த்தாலே பழி
கண் பட்டாலே
நெஞ்சுள் நெறி கட்டும்
சுற்றிப்போடச்சொன்னாள்
பாட்டி….

வஞ்சகம் செய்தான் மன்னன்
வறுமையில் வாடினர் மக்கள்
ஈற்றில் இயலாமை
எதிர்த்தனர் மன்னனை
குடிசைகள் எல்லாம்
தீப்பற்றி எரிந்தது..

செல்வாக்கு சரிந்ததாக
ஐயப்பட்டான் மன்னன்
புலவனை கொண்டுவந்து
பாட வைத்தால் சரியாகிப்போகும்
மந்திரிகள் கூட்டமாக கூறினர்…
பிரளயம் திரண்டு வந்து
விண்னள வுயர்ந்து ஊரை
கொண்டது காவு
குடித்தது உயிரையெல்லாம்…
பறவையும் புழுவும் பாம்பும்
காடுவாழ் முயலும் மானும்
காற்றிடை செய்தி கண்டு
கடந்தன இடம்பெயர்ந்து
நிகழ்வுகள் அறியா மண்ணுள்
மாண்டவன் மனிதன் கண்டோம்.