சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

=முள்ளிவாய்க்கால்=
===================

தேய்பிறை வைகாசித் திங்கள்
சிறப்பான வசந்த காலம்….
இருந்தும்
முள்ளிவாய்க்கால்
மண்டலத்து மரங்கள் எல்லாம்
சில வருடங்களாக
வைகாசி வசந்தத்தில்
இயல்புக்கு மாறாக
இலைகளை உதிர்த்துவிட்டு
மௌனித்து
துக்கம் நினைவு கொள்வதாக
பட்சி ஒன்று
செய்யுள் வடிவில் சொல்லிவிட்டு
பறந்து போகிறது.

பருவகால வசந்தத்தில்
இனப்பெருக்க கலவிக்கு
நந்திக்கடலில் கூடும்
சைபீரிய நாரைகள்….
சில வருடங்கள்
நந்திக்கடலில் இசையவில்லை…
மெல்ல மெல்ல
இடத்தை மாற்றிக்கொண்டு
வங்களாதேசத்தில்
விடுமுறையை கழிப்பதாக
முள்ளிவாய்கால் புறாக்கள்
கவலைப்பட்டு கொண்டன.

புத்தர் சிலைகளும்
அரச மரங்களும்
வேலியை பிய்த்துக்கொண்டு
அத்துமீறுவதாக மக்கள்
அங்கலாய்த்து கொண்டபோது….

முள்ளிவாய்க்கால்
பொட்டல் காடு
ஆகிவிடக்கூடாது என்பதால்
புத்தர் சிலைகளும்
அரச மரங்களும்
நல்லெண்ண நோக்கோடு
அவசரமாக முளைப்பதாக
மூத்த தமிழ் அரசியல் வியாதிகள்*
புலம்பிவிட்டு
அரசுக்கு ஆதரவு கொடுப்பதற்காக
கொழும்புக்கு விரைகின்றனர்.

செங்காந்தள் செடிகள் மட்டும்
கார்த்திகை மாத பிரசவத்திற்காக
வழமைக்கு மாறாக
வைகாசி வசந்தத்தில்
செருக்களத்தின் கறுத்த மண்ணில்
துளிர்த்து வளர்ந்து
பார்க்குமிடமெல்லாம்
படர்ந்து நிற்கின்றன.

அன்றைய செருக்களத்தில்
தினமும் ஒரு சிவராத்திரியை
மக்கள் தரிசித்தபோது
விடுப்பெடுத் தோடிய
சிற்றம்பலமும் சிவமும்
முகத்திரை கிழிந்து
அம்பலமாகிய பின்னும்
திரும்ப வந்து குடியேறி
புனருத்தானத்தை எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர்.

உணவை தடை செய்து
உண்ணீரும் தடை விதித்து
சுவாசத்தில் விசம் கலந்து
சுற்றி ரவை வேலி கட்டி
காற்றில் கலந்துவிட்ட
செருக்களத்தின் வரலாற்றை….
மாற்றியமைத்து
சுற்றுலா தலமாக நிலை நிறுத்த
அத்தனை முயற்சிகளும்
கம்பீரமாக முன்னெடுக்கப்படுகிறது.

சம்பிரதாயத்திற்கு
கஞ்சிப்பானைகளும்
தேங்காய் சிரட்டைகளும்
கயஸ் வான்களில்
கொண்டுவந்து இறக்கப்பட்டு
முதல் மரியாதை கஞ்சி
இராணுவத்தினருக்கு
வார்க்கப்படுகிறது.

உலக வல்லரசுகள் உதவியுடன்
தமிழனை தனிமைப்படுத்தி
மரணப் பரிசோதனை செய்து
கண்ணி வைத்து கொன்ற இடம்
முள்ளிவாய்க்கால்
என்று நான் சொன்னால்
பிரிவினைவாதி என்று
அரசியல்வாதிகளும் அரசும்
முறைத்துக்கொண்டு
அவசரகாலசட்ட விதிகளை
தேடுகின்றனர்.

-நாதன் கந்தையா-