வியாழன் கவிதை

நாதன் கந்தையா

பூங்காற்று
புது வெய்யில்
ஆங்காங்கே குழலோசை
குயிலார் கூவ

மாங்கு மாங்கென்று
மந்தமாய்
ஒரு கீறல் காதில்
காத்திரமாய் நிமிர்ந்த
ஆண் குருவி

கண் கெட்ட மனிதன் ஏதோ
மாற்றுகிறான்
அரசியலில் என்று
கூரைக்கு தாவியது
நோக்கியது

மத்தளச்சத்தமும் அல்ல
மரபுவழி மனித
அனர்த்தமும் அல்ல
மா மரத்தின் கீழ் இடுக்கில்
மரங்கொத்தி ஒன்று
மங்கு மாங்கென்று…..

ஆண் குருவிக்கு வியப்பு
ஏன் கூடு கட்டாமல்
மரத்தை கொத்துகிறான் என்று.