சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

நினைவுநாள்
******************************

அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு
அன்னை வளர்த்தாலும் – பிள்ளை
தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட
எதிரி தடையாக.
நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர் – புலி
தமிழர் படையாகி
களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர்
உலகம் வியந்தாக.

படலை திறந்தொரு தெருவில் இறங்கிட
பயந்து சிலரோட – நடுத்
தெருவில் பலர் கதை முடிந்து
சாவொரு மலிந்த நிலையாக
களங்கள் திறந்து சுழன்று சமரிடை
நிமிர்ந்த புலி வீரன் 
குருதி படிந்து புதைந்து கிடந்தமண்
கோவில் லாகாதோ.

திருவில் பிறந்தவள் சிறந்து பயின்றவள்
சதியை பொறுக்காமல்
குமுறல் விரிந்தொரு சினந்து புலியென
விதந்து களமாட,
குருவி பறந்தது போல ஒரு ரவை
கூவித் துளைத்தோட
கருவி சுமந்தவள் காவலரணிலே
காவிய மானாளே.

நெஞ்சு நிமிர்ந்தொரு குண்டு சுமந்தவன்
எங்கள் புலிவீரன் – எதிரி
அஞ்சி நடுங்கிட வந்து கரும்புலி
என்று அறிந்தோமே
விண்ணும் அதிர்ந்திடும்
வீரம் நிறைந்தவன் என்று முரசாடு
எழுந்து ஆடுவர் திரும்ப கூடுவர்
மறந்துபோகாதே.

– நாதன் கந்தையா –
சுவிற்சர்லாந்து.