சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

#கடவுள்

கோவிலுக்குள்
கடவுள் இருப்பதாக
அம்மா சொன்னார்கள்,

பள்ளிக்கூட ஆசிரியரும்
அதையே சொன்னார்,

நம்பிக்கையுடன் கோவிலுக்கு
சென்று பார்த்தபோது
கோவிலுக்குள்
கற்சிலை ஒன்று மட்டும்
அசையாமல் இருந்தது.

எனக்கு
அதிர்ச்சியாக இருந்தது.

எனது சந்தேகத்தை
அம்மாவிடம் கேட்டபோது
காதை பிடித்து திருகி
அடங்கி இரு என்று
சைகை செய்தாள்.

கடவுள் ஊருக்கு போயிருப்பார்
திரும்பி வரும்போது
பார்ப்போம் என காத்திருந்தேன்.

காலம் ஓடி
விபரம் புரிந்தபோது
கோவில் இதுதான்
சிலைக்குள் கடவுள்
மறைந்துதான் இருப்பார்
அதுதான்
வேதாந்தம் என்பது
ஓரளவு பழகிப்போய்விட்டது.

எனக்கோ
கடுமையான சூழ்நிலைகளிலும்
மிக மகிழ்வான தருணங்களிலும்
கோவிலுக்குள் கடவுள் இருப்பதாகவும்..
மன இறுக்கம் இயலாமை
வெறுப்பு உண்டாகும்போது
கடவுள் இல்லை
என்ற எண்ணமும் வந்ததுண்டு.

இருந்தும்
கோவிலுக்குள்
கடவுள் இருப்பதாகவே
பக்தி பெருக்குடன்
பலரும் கோவிலுக்கு
போய்க்கொண்டிருக்கின்றனர்.

பூசாரி தினமும்
மந்திரம் ஓதி பூசைசெய்கிறார்,

அவர்
கடவுளை கண்டதாகவும்
தெரியவில்லை
கடவுளின் கருணையால்
புதையல் கிடைத்து
பொரளாதாரத்தில்
முன்னேறியதாகவும்
தெரியவில்லை.

தினமும் பூசாரி
பக்தர்களிடம் யாசகம் வாங்கியே
வயிற்றை கழுவினார்
பற்றாக்குறையை போக்க
வெளியே சென்று
கடவுளின் பெயரால்
மந்திரம் சொல்லி
யாசகம் வாங்கியே
வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இருந்தும்
கோவிலுக்குள்
கடவுள் இருப்பதாகவே
பெரும்பாலானோர்
அடித்து
சொல்லிக்கொண்டனர்.

திருவிழா காலங்களிலும்
வேள்வி நேரங்களிலும்
ஊர் ஒன்றாக குவிந்து
கோவிலில் கூடுகிறது,

தேனும் திரவியமும்
நவரத்தினங்களும்
கொட்டி இறைக்கப்படுகிறது,

கடவுள் இருப்பதால்த்தான்
அது நடைபெறுவதாக
சொல்லுகின்றனர்.

மன்னர்களும்
ஜமீன்களும்
கோவிலுக்கு
வானளாவ கோபுரங்களை
கட்டி எழுப்பியிருக்கின்றனர்,
முத்துக்கள் பதித்து
தங்க கலசத்தையும்
உச்சியில் கொண்டைபோல
சாத்தியிருக்கின்றனர்.

இருந்தும் கடவுளின்
அசைவு தெரியவில்லை,

கடவுள்
வெளியே வரவுமில்லை,
இருந்த போதும்
கோவிலுக்குள்
கடவுள் இருப்பதாகவே
சொல்லிக்கொள்ளுகின்றனர்

காற்றையும் மலையையும்
கானகத்துள் மரத்தையும்
பூத்து குலுங்கும் மலர்களையும்
புல்லாங்குழலின் இசையையும்
ஆற்றில் நீரையும்
அதில் குளிக்க
உன்னையும் என்னையும்
கடவுள்தான்
படைத்ததாக
கல்வெட்டில்
எழுதி வைத்திருக்கின்றனர்.

எனக்கு காய்ச்சல் வந்தபோது
கோவிலுக்குப்போய்
திருநீறு கொண்டுவந்து
நெற்றியில் இட்டு
கையில் நூல் கட்டிவிட்டாள்
அம்மா
காய்ச்சல் மாறவில்லை,

அப்பா
வைத்தியரிடம் அழைத்து சென்றார்
மருத்துவர்
மாத்திரை கொடுத்தபோது
காய்ச்சல் நின்றுவிட்டது.

ஆழிப்பேரலையில்
இலட்சம்பேர்
கொல்லப்பட்டபோது
விதி என்றனர்,

ஆறு மாதம் கழிந்து
வறட்சி வந்தபோது
கடவுளுக்கு
கண் இல்லை
என்று திட்டித்தீர்த்தனர்,

ஐப்பசி மாதம்
இயற்கை மழை வந்தபோது
அது
கடவுள் செயல் என்றனர்.

நான் கோவிலுக்குள்
ஊடுருவி பார்த்தேன்
சில கோவில்களில்
சாமி சிலைகள்
திருட்டு போய்விட்டன,
சில கோவில் சிலைகள்
ஆழிப்பேரலையில் அடிபட்டு
தெருவில் கிடந்தன,
ஒன்றிரண்டு சிலைகள்
அசையாமல்
அப்படியே கோவிலுக்குள் கிடந்தது.

இருந்தும்
கடவுள்
கோவிலுக்குள்
இருப்பதாகவே சொல்லுகின்றனர்.

என்னுள் இருந்த சந்தேகம்
வெளியேறி
தெளிவு பிறந்தபோது
கடவுள் சில வேளைகளில்
கல்லுத்தான்
கல்லாகத்தான் இருப்பார்
என்பது
உண்மையென்றாலும்

உண்டென்றால்
அது உண்டு
இல்லையென்றால்
அது இல்லை
தெய்வம் என்றால்
அது தெய்வம்
சிலை என்றால்
வெறும் சிலைதான்,

கண்ணதாசனின்
தத்துவம்
கடவுள் வாக்குபோல்
மண்டைக்குள்
ஒலித்துக்கொண்டே இருந்தது

நூறு வீதம்
ஒரு சக்தியை
என்னால் உணரமுடிகிறது.