சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா நிகழ்வு 214

====தீ====

இளவேனில் அரசு
ஆட்சி இழந்து…
கோடை அரசன்
சிம்மாசனம் அமர்ந்த பொழுதுகள்…

மெல்ல எழுந்தது
மஞ்சள் வெய்யில்…
மான்கள் ஒருபக்கம்
மயில்கள் இன்னொரு பக்கம்
காட்டின் நடு வெளியில் நின்று
குரல் திறந்து
கூவிக்கொண்டன.

பறவைகள்
குருவிகள்
மரக்கிளை மறைவில்
அனுங்கிக் கொண்டும்
குசுகுசுத்துக் கொண்டும்
காந்தர்வ மணம்புரிந்து
கலவி புரிந்து களித்தன…

ஆண் பறவை இரைதேட
பெண் பறவை
அடை காத்தது.

கோடை அரசனின்
ஆட்சியில்
சூரியனுக்கு
சிறப்பு அமைச்சு பதவி…

பள்ளிக் குழந்தைகள்
மதிய இடைவேளை நேரத்தில்
முற்றத்தில்
விளையாட முடியவில்லை
மரத்தின்கீழ் ஒதுங்கி கொண்டார்கள்…..

சூரியன் கடுமை காட்டுகிறார்
அரசனிடம்
மனு கொடுக்கவேண்டும்
ஆசிரியர்கள்
பேசிக்கொண்டனர்.

காடுகள் வாடிப்போய்
பச்சையம் இழந்து
கண்கள் சிவந்தன…

குசு குசுத்த குருவியும்
மயிலும்
தண்ணீர் தேடி
தொலைதூரம் சென்றன…

அகோர வெய்யில்…
கடல் நடுவே தாழமுக்கம்
காட்டிடை நின்ற
காற்றின் படைகள்
கடல் நோக்கி படை நகர்ந்தன…

காற்றின் படை நடத்தல் பரபரப்பில்
மலையுடந்த கல்லொன்று
குடு குடுவென குதித்து
சிதறி ஓடியது…

கல்லிடை உராய்ந்து
சட்டென ஒரு பொறி
பற்றி படர்ந்து
சருகிடை கனன்று
காட்டுதீயது கங்கிலாய் பரவிட….

தண்ணீர் கொண்டு திரும்பிய
குருவியின் கூடும்
தாகம் தீர்ந்து திரும்பிய
மயில் உறங்கிய மரமும்
காட்டு தீயில் எரிந்துபோய் விட்டன.

-நாதன் கந்தையா-