வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

நன்னெறி

நல்லோர் காட்டும் வழியில் நாமே
நன்மை செய்து வாழ்ந்திடுவோம்!
பல்லோர் போற்றி மகிழும் வகையில்
பலவாய் மொழிகள் கற்றிடுவோம்!
வல்லோர் வாழும் வாழ்வின் வகையை
வரமாய்ப் பெற்று வளர்ந்திடுவோம்!
சொல்லோர் உரைக்கும் அறிவின் உரையைத்
தொடர்ந்து கற்று மகிழ்ந்திடுவோம்!

உண்மை நேர்மை உணர்ந்து நாமும்
ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்!
வன்மம் அகற்றி வாழ்வைச் செதுக்கி
மலைபோல் வாழ்வை உயர்திடுவோம்!
கண்போல் கல்வி படித்து நாளும்
கருணை யுடனே காத்திடுவோம்
எண்ணம் போலே வாழ்வை அமைத்தே
ஏற்றம் கண்டு புகழ்பெறுவோம்!

வேற்று மொழிகள் கலவா வண்ணம்
வெற்றித் தமிழை எழுதிடுவோம்!
ஊற்றாய் உறவாய் உலக அரங்கில்
உயிராய்த் தமிழைப் போற்றிடுவோம்!
நாற்றாய்க் கல்வி நயமாய் வளர்த்தே
நாளும் நெஞ்சை நிமிர்த்திடுவோம்!
போற்றும் வையம் புரிந்து நின்று
பொழுதைச் சிறப்பாய் நகர்த்திடுவோம்!

பாவலர் நகுலா சிவநாதன் 1891