வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உதிரம் சிந்தும் விவசாயி!
உழைப்பை நல்கும் உழைப்பாளி!
களைப்பைப் பாரா உழைப்பாலே
காலம் பொன்னாய் ஆக்கிடுமே!
பிழைப்பே இந்த உலகாளும்
பிறப்பு முதலாய் இறப்புவரை!
தழைக்கும் பயிரே உழவர்தாம்
தந்த உழைப்பால் வணங்கிடுவோம்!

உதிரம் சிந்தும் நல்லுழைப்பே
உணவை வழங்கும் மக்களுக்கே
வதிக்கும் வாழ்வில் வரும்வசந்தம்
வாழ்வு மலர்ந்து மணம்வீசும்!
பதிக்கும் பயிரும் பலன்தருமே
பாரில் வளர்ச்சி படர்ந்திடுமே!
விதிக்கும் காலம் விளைவுபெற
விளைத்த உழைப்பே உயர்வாகும்!
ஓடி யோடி உழைத்திடுவோம்!
ஒளிரும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
தேடித் தேடிச் செயல்புரிவோம்
தேவை தன்னை நிறைவேற்றும்!
கூடிச் சேர்ந்தே உழைத்திட்டால்
கோலங் காணும் இவ்வுலகே!
நாடி நாமும் நலஞ்செய்வோம்!
நன்றே வாழ்வோம் உழைப்போடு

நகுலா சிவநாதன்1720