கலவரம்
நிலவரம் மாற்றும் கலவரம்
பலதரம் கண்ட எம்மினம்
சுதந்திர நிழல் தேடி
சூழ்ச்சிக்குள் புதையுண்டு
சுடுகாடாய் போனதே இன்று.
நாங்கள் எழுவோம்
என்று நினைத்து
எழுந்த போதெல்லாம்
வீழ்ந்து போனதே
பல தருணங்கள்.
வாழ்ந்து விடலாம் என்றால்
வரும் ஆட்சியாளர்கள்
எங்கள் வாழ்வை
வழியில்லா வாழ்வாக்கிவிட்டார்கள்
என்பதே எம் பேரவலம்.
கலவரங்களுக்குள் கட்டுண்ட
எங்கள் வாழ்வு
வலிகள் நிரம்பி
நிம்மதியை கரைக்கின்றது
ஒதுக்கப்பட்டவர்களாக
உலகும் ஓரவஞ்சகம் புரிகின்றது.
நாங்கள் தனித்து விடப்பட்டு
தரம் குறைந்த பொருளாக
தூக்கி எறியப்படும் நிலை மாற
வழியொன்றும் இனி இல்லை
படைத்தவன் பக்கமும்
குறை சொல்ல ஒன்றும் இல்லை.