சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி

சந்தம் சிந்தும் சந்திப்பு
272 ஆம் வாரம்
காலம்: 9/7//24 செவ் 7.45
தலைப்பு: “அடிக்கல்” அல்லது “அத்திவாரம்”
—————————————-
அத்திவாரம்
“””””””””””
கட்டடங்கள் நிலைப்பதற்குக்
கற்பாறை யத்திபாரம்
கற்றவைகள் மனத்திருத்தக்
கரிசனையே அத்திபாரம்
விட்டுவிடா தெழுவதற்கு
விருப்பமதே அத்திபாரம்
வியந்துனையே நோக்குதற்கு
விமர்சனமே அத்திபாரம்
இட்டமுடன் கடமையாற்ற
இரக்கமொன்றே அத்திபாரம்
ஈவதற்கும் ஏற்றுதற்கும்
ஈட்டுபொருள் அத்திபாரம்
திட்டங்கள் நிறைவேறத்
திறமையதும் அத்திபாரம்
தீங்களிக்கா நல்வழிக்கு
தொல்நூல்கள் அத்திபாரம்

அடிப்படையில் உறுதியொன்று
அத்தனைக்கும் வேண்டுமென்றால்
அரும்பயனை அடைவமென்ற
ஆத்மபலம் அத்திவாரம்
விடிவுனக்கு வேண்டுமெனின்
விடாமுயற்சி அத்திபாரம்
விபரமுடன் தொழிலியற்ற
வெல்பயிற்சி அத்திபாரம்
மடியும்வரை முயன்றவர்தம்
மாண்பறிதல் அத்திபாரம்
மண்ணிதனில் வாழ்வமைக்க
மணமுடித்தல் அத்திபாரம்
துடிப்புடைய வாழ்வதற்குத்
தூயவன்பே அத்திபாரம்
துன்பங்களைக் கடப்பதற்கும்
துணிவொன்றே அத்திபாரம்!

நட்பதனைப் பேணுதற்கு
நாடுமன்பே அத்திபாரம்
நல்நூல்கள் கற்றறிய
நயக்குமனம் அத்திபாரம்
உட்பகைகள் தீர்வதற்கும்
உளவிசாலம் அத்திபாரம்
உயரியதோர் சாதனைக்கும்
உடனிருப்போர் அத்திபாரம்
கட்புலனைக் காப்பத்தற்கும்
கதிரொளியும் அத்திபாரம்
கலக்கமில்லா நித்திரைக்கும்
கவலையறல் அத்திபாரம்
தட்பவெப்பச் சமன்நிலைக்கத்
தவமுடையார் அத்திபாரம்
தாழ்ச்சியிலா இருப்பெதற்கும்
தன்மானம் அத்திபாரம்!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.