சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி

பணி
பணியும் பணியில் பணித்தநம் பரமனே!
பயமும் விலகிப் பத்தியும் பெருகிட
அணியாய் பணியை அணிந்திடும் அழகனே!
அருகில் அணைய அகலுமெம் வினைகளும்
தணியும் தாகமும் தவிப்புடன் சோகமும்
தலைவ தீர்ப்பாய் தருமமும் நீயேயெம்
பிணிகள் அகலப் பேசறு நிலையால்
பின்னும் பணிவோம் பேதமில் அருளே!

வலிகள் உணரும் வள்ளலெம் இறையே!
வணங்கித் துதிக்க வரைமுறை யருள்க!
பலிகொள் பயமில் பாவிகள் நடுவே
பாதை வகுக்கும் பணிகளுன் கடனாம்
நலிந்து நடுங்கி நல்லவர் வேண்ட
நயந்து நல்க நாயகா வருக!
கலியின் துயரம் கணக்கில இங்கே
காவல் நீயே கருணையெம் மழையே!

பயனுறு பணிகள் பாரினில் நல்கி
பலமது சேர்க்கும் பழம்பெரும் பொருளே!
நயக்கும் பாக்கள் நாவினில் பிறக்க
நமக்குள் விளங்கும் நல்லருள் மறையே!
வியக்கும் பணிகள் விரும்பும் மலையே!
விருந்தில் மகிழும் விமலனே வருக
தயவும் காட்டுந் தாயுமா னவனே!
தரணி போற்றுந் தந்தையே பணிவோம்!