சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.செல்வ.தெய்வேந்திரமூர்த்து

திமிர்
“””””
கண்ணெனக் கரிசனை கொண்டவர் நடுவே
காரியாகிப் பிறந்ததில் கண்களும் திமிராய்
விண்ணதிர் கோசங்கள் வேண்டுவ தில்லை
விளைவது நற்றவ ஒழுக்கமும் திமிராய்
கண்ணெதிர் நின்று கனல்படு தமிழில்
கனன்றிடும் சொற்களில் கவிதையுந் திமிராய்
பெண்ணென எழுந்து பேரெழிலாகிப் பெரும்பகை
புறமுது கோட்டி ஆர்ப்பதும் திமிரே!

தன்னிக ரில்லாத் தலைமையின் பண்பில்
தாங்கிடும் சுமைகளின் தன்மையும் திமிராய்
என்னவர் என்னினம் என்மக்கள் என்றே
ஏற்றிடும் எண்ணமும் என்றுமே திமிராய்
பன்முகத் தோற்றம் பாரினில் யாங்கணும்
படர்ந்திடும் பாங்கிலும் பாசமும் திமிராய்
கன்நேர் உறுதியும் காதலும் கலந்ததாய்
காவியம் என்பனோ கருணையும் திமிரே!

எம்மினப் பெண்களின் எண்ணற்ற பாங்குகள்
எத்தனை எத்தனை திமிரினைக் காட்டும்
தம்மவர் நும்மவர் தாழ்விலாச் சொந்தமாய்
தக்கதாய் பேணிடும் தன்மையைச் சொல்வதா
சம்மதம் என்பதைச் சத்தியம் என்பதாய்
சாவிலும் காட்டிய சாதனைப் பெண்டிராய்
இம்மெனும் படியொரு இமைகளால்க் கட்டளை
இட்டதும் தட்டிடா இனமதன் திமிரே!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.