சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தேவதையே – எம்மருமகள்கள்
“””””””””””””””””””””””””””

மருவில்லா மகளாக மறு மகளும் வந்தாள்
மனசோரத் தென்றலென மண்மணக்கச் செய்தாள்
கருவினிலே அன்புமழை களித்ததனால்த் தானோ
கண்களிலே கருணைமழை பொழிந்தபடி நின்றாள்
விருப்பினையும் வெறுப்பினையும் வேதமெனக்
கொண்டாள்
வேள்வியிலே நம்விருப்பை வேகமுடன் பெய்தாள்
தெருவெல்லாம் கூடிநின்று தேவதையை மெச்ச
தேகமிங்கே ஒருசுற்றுத் தெளிந்திடவும் கண்டோம்!

தன்குடும்பம் என்பதெல்லாம் நம்குடும்பம் ஆச்சு
தளிரான அவள்கைகள் தாங்குமெங்கள் மூச்சு
நன்மகளைப் பெற்றவர்கள் நமக்களித்த சொத்து
நம்மவரோ அவள்கோர்த்த மாலையதன் முத்து
இன்முகத்தாள் எங்குடும்பத் தேற்றமிகு விளக்கு
ஈசனவன் பார்த்தெடுத்துப் பரிசளித்த நிலவு
புன்னகையால் புடம்போடும் பொன்மகளெம் அங்கம்
பூமகளாய் அணைக்கின்ற பொறுமையிலே சுரங்கம்!

குலந்தழைக்க இனந்தழைக்கக் குடும்பதீபம் ஆனாள்
கூடிவாழும் வாழ்க்கையின்பம் கொண்டவனுக் கீந்தாள்
நலம்பேணி மனம்பேணி நாட்களையுங் கூட்டி
நமனுமிங்கே அணுகாத நல்வாழ்வைத் தந்தாள்
பலத்தோடு பாவையவள் பாடுபடும் பாங்கு
பள்ளியின்கண் ஆசிரியர் படுதோல்வி ஆங்கு
நிலமிதனில் இவளழகிற் கீடுமிணை உண்டோ
நிலவொளியும் மங்கிடுதே ட நீடுபுகழ் கண்டே!