***** பிரிவின்நினைவலைகள்****
மங்கையென மலர்ந்து மண்ணிலே தவழ்ந்த சங்கத் தமிழ்த்தாயம்மா
எங்கள் திங்கள் ஒளிநீயம்மா
புங்கை நகர் புகுந்து பொன்னவரை மணந்து புதுமை கொண்டாயம்மா
புன்னகைத்தாயம்மா
பொங்கும் உணர்வாலே பொதிகைத் தமிழ்த்தாயை போற்றி வளர்த்தாயம்மா
போற்றி வளர்த்தாயம்மா
எங்கும் தமிழ்வளர்த்து எழிலாய் கவி ஆக்க எண்ணம் கொண்டாயம்மா – அதனில்
ஏற்றம் கண்டாயம்மா
கொவ்வை இதழ் விரித்து முல்லை சிரிப்புதிர்த்து முகத்தால் மலர்ந்தாயம்மா _ எங்கள்
அகத்தில் நிறைந்தாயம்மா
பாமுகப்பரப்பில் பாவை நீதோன்றி
பணிகள் செய்தாயம்மா -தமிழைப்பார்த்து
வளர்த்தாயம்மா
கொஞ்சும் தமிழ்பாடி கோதையரே நீங்கள்
கொடுமை சொல்லுங்களேன்- பெண்கள் மடமை தீருங்களேன் என்று
அஞ்சல்கவி ஆக்க அகிலமே பறந்த
அஞ்சுகம் நீயம்மா எங்கள் அஞ்சுகம் நீயம்மா
கங்கை நதிசேர காசிநகர் கண்டு கண்ணில் மறைந்தாயம்மா
கங்காதரர் கழலை அடைந்தாயம்மா
நெஞ்சம் உள்ளவரை நினைவில் உனையேந்தி நிலைக்கச் செய்வோமம்மா – நின்னை நிலைக்கச் செய்வோமம்மா…
* ஓம் சாந்தி *