****எம் முன்னோர் வாழ்வு ***
வாழ்வாங்கு வாழ்ந்தே வாழும்முறை தந்தவர்
தாழ்வில்லா வாழ்வாலே தரணியை ஆண்டவர்
ஏழ்கடல் தாண்டாமல் எட்டுத்திசை எட்டாமல்
பாழ்பட்டுப் போகாமல் பாரில் உயர்ந்தவர்
காடுகரம்பை வெட்டி கழனியாக்கினார்
ஓடும் உதிரத்தை வியர்வை ஆக்கினார்
வாடாமல் பயிர்களுக்கு வரம்பு கட்டினார்
தேடாத் திரவியத்தை தேடி உயர்ந்தார்
ஆடுமாடு எல்லாமே அணைத்து எடுத்தார்
பாடுபட்டு பாலுக்காய் பார்த்து வளர்த்தார்
கோடு போட்டு கூடுகட்டி கோழி வளர்த்தார்
வீடு சுற்றி விளைமரத்தால் வேலி அமைத்தார்
பாலைக் காய்ச்சி பருகியவர் பலமும் பெற்றார்
வேலையில்லா வெட்டியாக இருக்க மறந்தார்
ஓலைப் பாயை ஓய்வுநேர வேலை ஆக்கினார்
சேலைத் தலைப்பில் சேர்த்த பணத்தை செருகிக் கொண்டார்
தென்னை பனை மாமரங்கள் தேடிக் கொண்டார்
முன்னைப் பழப்பொருளாலே முதிர்ச்சி இழந்தார்
பின்னைக்கும் பிணியின்றி பேதமும் இன்றி
இன்னலின்றி இணைந்து கூடி
இனிதாய் வாழ்ந்தாரே