*******தீயில் எரியும் எம் தீவு******
இந்துமா சமுத்திரத்தில் இலங்கிடும் ஏந்திழையே
முந்தைப் பொருளணங்கே முழுமதிக் காவியமே
எந்தைத் தாயவளே எம்முயிர் தேவதையே
செந்தணலில் நீமூழ்கி சிதைகின்ற போதினிலே
பந்தம்கொள் எம்மனதும் பதைபதைத்து நிற்குதம்மா
ஆழ்கடல் முத்து என்றே அயலோர்
எடுத்துரைத்தார்
ஏழ்கடல் தாண்டி வந்தே உனதழகை
போற்றிச் வைத்தார்
வாழ்க நீ வாழ்க என்றே வாழ்த்துரைகள்
தந்து சென்றார்
வீழ்ந்து போவாயோ விதிவசத்தால் எம்தாயே
ஆழத்தெரியாத அரசரால் அல்லோலம்
பாழாகி போனாலோ அந்தோ
பரிதாபம்
வாழாமல் போவாயோ அம்மா நீ வருங்காலம்
தாழாத துன்பமம்மா தரணியில் இக்காலம்.