சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து.
தலைப்பு :

*தலைப்பூ*

அண்டை அயலவரை அம்மா அழைத்துக் கொண்டு
பண்டைத் தமிழரது பண்பாட்டைக் கொண்டவளாய்
கொண்டை மாலைகட்டி கோவிலுக்கு போகையிலே
செண்டைப் பூக்களதும் சிரித்திடுமே
சித்திரத்தால்

சில்லென்ற காற்றில்
சேர்ந்தசைந்த கூந்தலுக்கு
மல்லிச்சரம் தொடுத்தே மங்கையரும் மனம்இனிக்க
மெல்லிடைஅசைத்து மேதினியில்
கோயில்வர
அல்லிருட்டில் அணங்குக்காய் அழகுநிலா அருகில்வரும்

பட்டுப் பாவாடை கட்டி பவளமல்லி பூத்தொடுத்து
சிட்டுச் சிறுமியரும்
சிங்காரமாய்க் கோயில்வர
கொட்டும் நிலவொளியும் கூடவே
சேர்ந்து வர
பொட்டும் பூவும்சேர்ந்து
புன்னகை உதிர்த்து நிற்கும்.

மங்கைக்கு அழகு தரும்
மணம் வீசும் மல்லிகையே
மங்கலத்தை அள்ளித் தந்து
மனதாளும் மல்லிகையே
திங்களுக்கு திறம்காட்டி
திகைப்பூட்டும் மல்லிகையே
எங்கெங்கும் நீமலர்ந்து எழில்தருவாய் மல்லிகையே…