சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து.

தலைப்பு : *பாட்டி*

பாட்டி நல்ல பாட்டி பாசமுள்ள பாட்டி
ஓட்டும் வாழ்வில் ஒன்றி
ஒன்றுபட்ட பாட்டி
கூட்டு உறவு வாழ்வில் கூடிநின்ற பாட்டி
பாட்டும் கதையும் சொல்லி
பார்த்து வளர்த்த பாட்டி

மூட்டுவலி என்று முடங்கி
முடங்கி கிடந்தாள் இல்லை
முடக்கத்தான் எடுத்து முடித்து வைப்பாள் தொல்லை

முருங்கையிலை ஒடித்து
முந்தானையில் நிறைத்து
இரும்புச்சத்து அறிந்து
இருத்தித் தந்தாள் அன்று
வேம்பம்பூவை வீணே வீழ விடமாட்டாள்
வாட்டம் நீக்க வடகம்
வண்ணமாக தருவாள்

பனையோலை வார்ந்து பாயை அழகாய்ப் புனைந்து
மனை வாழ்வில் இணைந்து மகிழ்வாய்
வாழ்ந்த பாட்டி

மாட்டுத் தொழுவம் காத்து
மண்ணில் பொருளைச் சேர்த்து
கூட்டு வாழ்வில் இணைந்து கூடமாட
உழைத்தாள்

ஆட்டம் கண்ட கைகள்
அமைதி கொண்டதில்லை
கூட்டு வாழ்வில் இன்பம்
கொடுத்து வாழ்ந்த பாட்டி