21.06.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு ..
வாரம் -178 /
தலைப்பு !
“தந்தைக்கோர் தாலாட்டு”
( வெண்செந்துறை )
ஆராரோ பாடுகிறேன்
அப்பா கண்ணுறங்க
சீராட்டி வளர்த்தஎன்
செல்லமே கண்ணுறங்க //
தாயாக மாறிநான்
தாலாட்டு பாடிடவா
நோயாலே வீழ்ந்தீரே
நோன்பிருந்து தேற்றிடவா //
மாத்திரை விழுங்கவைத்து
மடிமீது தாங்கிடவா
காத்திருந்து கண்விழித்து
கருமவினை போக்கிடவா //
உடம்பெல்லாம் வலிக்கிறதா
ஒத்தடம் வைத்திடவா
படபடக்கும் இதயத்துக்கு
பணிவிடை நான்செய்திடவா //
தள்ளாடும்்வயதினிலே
தூணாக இருந்திடவா
உள்ளன்பை உணர்ந்துநான்
உரையாட வந்திடவா //
படுக்கையிலே என்தந்தை
பார்ப்பதற்கு முடியலையே
உடலிங்கு இருக்கிறது
உள்ளமெண்ணி துடிக்கிறது //
அருகினில் இருந்திருந்தால்
அத்துனையும் செய்திருப்பேன்
உருகியே புலம்புகிறேன்
உள்ளுக்குள் அழுகின்றேன் //
———————————————-
கவிப் பார்வைக்கும்
தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும்
தங்கள் பெரும்பணிக்கும் என்மனமார்ந்த நனிமிகுந்த நன்றிகள்.
நன்றி நன்றி பாவை அண்ணா🙏
அதிபர் அவர்களுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன் 🙏