29.11.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் – 202
“நினைவு நாள் “
மகளே மடிசுமந்து வார்த்தஅன்னை
மரண தீபம்ஏற்ற வந்தேன்
தகனம் கண்ட தருணம் எண்ணி
தணலில் விழுந்த புழுவாய் நின்றேன்
உன்முகம் எந்தன்அகம் முன்னே
வந்து வந்து போகுதம்மா
மரணித்த ஞாபகத்தை
தந்திவந்து சொல்லுதம்மா
பகல் கனவாய் போனதம்மா
பாவி கண்ட கனவெல்லாம்
பால்வார்த்த நெஞ்சமிங்கு
பற்றியே எரியுதம்மா
தாயக மண்ணிற்கு
தந்தேனுன்னை இரையாக…
தானம் ஈந்தகையிரண்டும்
தவிக்குதம்மா தனிமையிலே
கல்லறையை கண்டுகண்டு
கண்ணீராய் குருதியோட்டம்
புல்லரித்து தேகமெங்கும்
புண்பட்டு கொதிக்குதம்மா
பூவான உன்முகம்
போரினில் கருகக்கண்டு
பூவனமும் வாடியதே
பூவேநீ உதிர்க்கையிலே
அகல்தீபம் ஏற்றியே
ஆண்டுதோறும் அழுகின்றேன்
என்முகம்முன்னே நீவந்து
என்முத்துக் கண்ணீர்துடைப்பாயோ !
நன்றி . பாவை அண்ணா🙏