வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 601

நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையா

பித்துப் பிடித்தே ஆடுதே மானுடக் கூட்டம்
சித்தம் கலங்கி ஆடுதே ஆடாத ஆட்டம்
யுத்தமொன்று தீர்வாகாது அழிவையே கூட்டும்
கத்தியெடுத்து குத்தினாலது பகையினை ஊட்டும்

இறைவன் படைத்தவுலகத்திலேனோ ஆயுத விளையாட்டு
சிறைப்படுத்தலாமோ ஜனநாயகத்தை பூட்டினைப் போட்டு
மறைசொன்ன வார்த்தைகளை வளர்ந்தவரும் கேட்டு
கறைபட்டுக் கொண்டாரே பாடிச் சுயநலப்பாட்டு

காட்டுமிராண்டியாய் அறியாத வாழ்க்கை அந்தக்காலம்
நாட்டுக்குள் புகுந்த பகுத்தறிந்தவாழ்க்கை இந்தக்காலம்
போட்டுடைத்தே வாழ்க்கையை ஏனிந்த அலங்கோலம்
காட்டிவிட அதிகாரத்தை போட்டிபோட்டழியவாவிந்த ஞாலம்

கூடாது உயிரழிவுகள் பூலோகத்தில் கூடாது
வாடாது நேசமலர்கள் ஒருபோதும் வாடாது
தேடாது உலகமகா அன்பைத் தேடாது
மூடாது சமாதான மேகம் மூடாது.

ஜெயம்
02-04-2022