வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 643

சிங்கப் பெண்ணிவள்

அடுப்பங்கரையே கதியென இருந்ததெல்லாம் அப்போது
அடுத்தடுத்து சாதனையாய் படைக்கின்றாள் இப்போது
தடுத்துவிடும் தடைகளினை முட்டி சிதறடித்துக்கொண்டு
எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்ணாகவின்று

மூன்றுநாள் இயற்கையின் கொடுமை முடக்கிவிடவில்லை
மூன்று முடிச்சும் அடிமையாய் அடக்கிவிடவில்லை
ஆண்களைப் போலவே அனைத்துத் துறைகளிலும்
வான்வரை எட்டி படைக்கின்றாள் சாதனைகள்

போராடிய காலம் உரிமைக்காக அந்தக்காலம்
பாராளும் கோலம் இன்றைய புதியகோலம்
ஊரே இவளோடு ஒதுங்காது ஒத்தோடிக்கொண்டது
யாரோ இவளில்லையென அவளாளுமையைக் கொண்டாடியது

பேதையென எழுதிய கவிஞர்களே மாறுங்கள்
மேதையான சமகால முகவரியைக் கூறுங்கள்
பாதைமாறிய பயணமல்ல மாற்றிய பயணம்
வாதையாயிரம் வரினும் சாதித்தே முடிப்பாள்

விதியொன்றை புதிதாக அவளே எழுதினாள்
மதியாதோர் தமையிங்கு மதியற்றோர் எனக்கண்டாள்
புதியதோர் உலகினை பெருமையுடன் உருவாக்கினாள்
பதிவுசெய்தே வெற்றிகளை வலம்வருகின்றாள் சிங்கப்பெண்ணாக

ஜெயம்
08-03-2023