Kavi 625
ஒன்றுபடுவோம்
ஒன்றுபட்டிங்கு வாழ்தலே வாழ்வு
என்றெண்ணிக்கொண்டாலே வராதே தாழ்வு
ஒருவர்மேல் ஒருவருக்கு வேண்டாமே வெறுப்பு
அருமையாக ஒன்றுகூடி வாழ்வது நம்பொறுப்பு
ஆதிமனிதர்கள் காட்டுமிராண்டிகளாக அடிபட்டார்
பாதியைக் கடந்த பின்னரே அனுபவப்பட்டார்
அன்றைய மனிதர் வேடுவராகக் காட்டில்
இன்றைய மனிதரோ நாகரீகத்தின் நாட்டில்
கூடி வாழ்தலில் கோடி நன்மை
கூறினார் மூத்தோர் அதுவே உண்மை
அடம்பன் கொடியும் திரண்டாலே மிடுக்கு
இரண்டுகை தட்டலிலே ஓசையின் பிறப்பு
தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி
பிணியது தீரட்டும் பிறக்கட்டும் புதுவழி
நானென்ற அகங்காரம் சிந்தைவிட்டு தொலையட்டும்
வீணான பெருமைகளின் எண்ணம் விட்டகலட்டும்
மேலோரென்றும் கீளோரென்றும் பார்க்காது பேதம்
வாழ்வோர் வாழ்வதுவே வணங்கவேண்டிய வேதம்
ஏழையென்றும் கோழையென்றும் எதற்கிங்கே பிரிவு
ஆளையிங்கு பார்க்காமல் காட்டலாமே பரிவு
மதவெறி கொண்டே அலைவதும் தகுமோ
அது கூறும் சமத்துவ வாழ்க்கையற்ற ஜெகமோ
வேற்றுமைப்பட்டால் அது தருவது வீழ்வாகும்
ஒற்றுமைப்பட்டால் அங்கு வருவதே வாழ்வாகும்
ஜெயம்
12-10-2022