சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

மழைநீர்

மரம் இலை துளிர்விட உணவாக மழைநீர்
உரம் அதை வீணாக்காது மனிதா சேர்த்திடப்பார்
பூமி பூத்திட துள்ளி வருகின்றதே துளித்துளியாய்
சாமி அதுவென கொண்டாடி மகிழ்ந்திடு வழிவழியாய்

புல்லுக்கும் நெல்லுக்கும் பாலூட்ட விண்ணின்று வந்ததோ
செல்லமாய் முத்தமிட்டு இலவசமாய் இருப்பதைத் தந்ததோ
வறண்ட பூவுலகும் தணித்தே சூட்டை செழிப்புற்றதே
மறந்து கவலைகளை உயிரினங்கள் சுகம் பெற்றதே

மழையே வாவா நான் மயிலாய் மாறிட வா
விளையாடியே சிறுவனாய் காகிதக் கப்பலை ஓட்டிடவா
உலகத்து பயிர்களின் உயிர்களைக் காத்திட வா
சில மணித்துளிகளில் தூறலால் ஆசீர்வதித்திட வா

ஜெயம்
27-09-2022