கவி 622
சொந்தம் பாசம் நேசம் பேசுமா
அன்பாக பேசிக்கதைக்க நேரமோ இல்லை இது சுயநலன்களால் கட்டப்பட்ட அவசர காலம்
உண்மையைச் சொன்னால் பொய்யாகப் பழகி மெய்யினைத் தேய்க்கும் கானல்நீர்க் கோலம்
இன்றைய இந்த இயந்திர உலகில் வாழ்க்கை பிழையாகி உறவுகள் நிலையும் கவலைக்கிடமாச்சு
அன்னை தந்தை பிள்ளைகளென ஒட்டாது எட்டி வாழும் முறையே நவீனமாய்ப் போச்சு
தொழில்நுட்ப வரவுகளிற்குள் பழக்கங்களையும் தொலைத்ததே மானிடக்கூட்டம்
தொழிற்படா பாசமும் அக்கறையும் தங்காது வாழ்க்கையில் எடுத்ததே ஓட்டம்
பணத்தைத் தேடி மொய்க்கும் மனங்கள் இதுவே இன்றைய வாழ்வின் இரகசியம்
தனக்குத்தனக்கென பிடித்தும் நடித்தும் பண ஈட்டலே மொத்தத்தில் அவர்க்கு அவசியம்
பாட்டன் பாட்டி அத்தை மாமா அப்பன் அம்மை வழிவந்த சொர்க்கமாம் சொந்தம் இன்பம்
கூட்டுக் குடும்பத்தை பிறதேசம் தவிர்க்கும் ஈன்ற பிள்ளைகளின் முதிரா அறிவால் மீறிடும் துன்பம்
அண்ணனோடு பிறந்த தங்கைக்கோ அன்று அவளை தோளில் சுமக்கும் அண்ணன் அவள் வரமாக
மண்ணை விட்டு புலம்பெயர்ந்த அண்ணன் பிள்ளை அவனளவிற்கு இல்லை இயல்பில் தரமாக
ஊதியத்தாலே வந்த பாதிப்பு கணவன் மனைவி பிள்ளைகளென தனித்தனி என்ற நிலைமை
பாதியில் வந்த அயல்நாட்டு மோகத்தால் அடிபட்டுப்போனது அடிப்படையில் பழமை
சேர்ந்துவாழும் சுகம் அறியாத கடுகதி வாழ்க்கைக்குள் அகப்பட்ட புதிய தலைமுறை
சார்ந்து வாழ்வதை வெறுக்கும் புதியதோர் சமூகத்தில் உறவு பாசம் நேசம் என்பதும் தெரியாது எதுவரை
ஜெயம்
14-09-2022