வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 619

தேடும் விழிக்குள் தேங்கிய வலிகள்

சத்தியம் சாத்தியப்படாததோர் தேசம்
நீதியை கழுமரத்திலேற்றிய நாடு
அந்த அரக்கர் பூமியில்
தொலைந்த குஞ்சுகளைத் தேடிய தாய்ப்பறவைகள்போல்
அலைந்து தேடும் உறவுகளாக கவலைச் சிறையினில் வாடி

மனிதத்தை தகர்த்து மனிதரை சாய்க்கும் இனம்
பவித்திரமடையாத பாவம் செய்பவர்கள்
மீன்பிடிப்பதைப்போல் ஆள்பிடிப்பவர்கள்
சாபம் கொடுத்தவரிடமே கண்ணீருடன் வரம் கேட்க்கின்றார்கள்
தூய்மையின் அருள் பெற சாக்கடையிடம் வேண்டுதல்

இரக்கமில்லா ராட்ஷசன் அமர்ந்திருக்கும் அரியணை
உணர்வுகளுடன் விளையாடியே காலத்தைக் கழிக்கின்றது
மெழுகுவர்த்திகளாக உருகியே சொந்தங்கள் தீக்குளிக்கின்றனர்
அருள்புரியும் ஆண்டவனும் அழ வைத்தே வேடிக்கை பார்க்கின்றான்

பலவீனர்களிற்கு நியாயம் கிடைக்காத உலகமிது
அனுதினமும் விடிகின்றது இவர்கள் வானம் விடியவில்லை
பழுதான மனதுடன் நடைப்பிணங்களாகப் போராட்டம்
வசனம் பேசும் அரசியல்வாதிகளும் செயலில் இறங்கவில்லை
இழந்தோரைத் தேடும் உலகில் அமைதியும் பிறக்கவில்லை

ஜெயம்
22/08/2022